கேரளாவில் நீடிக்கும் கனமழை 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
கேரளாவில் நீடிக்கும் கனமழை 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
ADDED : மே 21, 2024 01:09 AM
திருவனந்தபுரம், கேரளாவில் கனமழை தொடரும் சூழலில், கலெக்டர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால உதவி மையங்கள் திறக்கப்பட்டு, அனைத்து துறைகளும் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் இடுக்கி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
உஷார்நிலை
தொடர்ந்து மழை பெய்து வந்த சூழலில், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டது.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'ஆரஞ்சு அலெர்ட்' அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது; சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை நீடிப்பதால், எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டத்தில் அனைத்து துறைகளும் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலகங்களில், 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால உதவி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தேசிய மற்றும் பேரிடர் குழுவினரும் பல இடங்களில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மலை மாவட்டங்களில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மண் சரிவு, நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள இடங்களில், வேறு பாதைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
'மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் சுகாதாரத் துறை விழிப்புடன் இருக்கவும், அவசரகால மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
மஞ்சள் எச்சரிக்கை
இந்நிலையில், கேரளாவின் 14 மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும்; திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

