சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு கர்நாடகாவில் சிவப்பு கம்பளம்
சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு கர்நாடகாவில் சிவப்பு கம்பளம்
ADDED : செப் 10, 2024 06:43 AM

பெங்களூரு; ''கர்நாடகாவில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு, நிலம் உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்,'' என மாநில கனரக தொழில்கள் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
ஆலோசனை
பெங்களூரு விதான் சவுதாவில், சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவுடன், அமைச்சர் எம்.பி.பாட்டீல், நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கூட்டமைப்பின் துணை தலைவர் பிரசூன் முகர்ஜி, பிரபல தொழிலதிபர்கள் ஜெப்ரி குவோ, டக்ளாஸ் டியான், சமந்தா டியோ, சென் சியோங், பப்பு மிலிந்த் சுரேஷ், முதல்வரின் கூடுதல் தலைமை செயலர் அதீக், கனரக தொழில்கள் துறை முதன்மை செயலர் செல்வகுமார், கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், கர்நாடகாவில் முதலீடு செய்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று, மாநில அரசு தரப்பில், முதலீட்டாளர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
இதே வேளையில், சிங்கப்பூரின் அப்லைட் டோட்டல் கன்ட்ரோல் டிரீட்மென்ட் பி.டி.இ., லிமிடெட், பயோமெட் சர்வீசஸ் பி.இ.டி., லிமிடெட், கேட்டரிங் சொல்யூசன்ஸ் ஹர்மீஸ், ஏபிடெக் கார்ப்பரேஷன், இன்ஸ்பயர் டெக்னாலஜி ரீட்ஸ் லிமிடெட், யூனிவர்செல் சக்சஸ் என்ட்ர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய ஆறு நிறுவனங்கள், கர்நாடகாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தன.
முதலீட்டாளர்கள் மாநாடு
இவர்களுக்கு தேவையான, நிலம் உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த, சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு பிரதிநிதிகள், 'பெங்களூரில் சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு அலுவலகம் திறக்க விரும்புகிறோம். கர்நாடக அரசு ஒத்துழைப்பு தந்தால், கர்நாடகாவில், சிங்கப்பூர் இருப்பது போன்று உருவாக்குவோம். அந்த அளவுக்கு, எங்கள் கூட்டமைப்புக்கு பலம் உள்ளது' என்றனர்.
அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகையில், ''பெங்களூரில் 2025 ஜனவரி 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சிங்கப்பூர் தொழிலதிபர்களும் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.