'ரீல்ஸ்' டிரைவர்கள், கண்டக்டர்கள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி எச்சரிக்கை
'ரீல்ஸ்' டிரைவர்கள், கண்டக்டர்கள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி எச்சரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 06:17 AM
பெங்களூரு: 'ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி பஸ் ஓட்டினால், சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள்' என, அரசு பஸ் டிரைவர்களுக்கு, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஹூப்பள்ளியில் இருந்து பாகல்கோட்டிற்கு கர்நாடக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
டிரைவர் ராமண்ணா, ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி பஸ்சை ஓட்டினார்.
அப்போது எதிர்பாராத விதமாக மாட்டு வண்டி மீது பஸ் மோதியதில், இரண்டு காளைகள் இறந்தன.
மாட்டு வண்டியை ஓட்டி சென்ற விவசாயி மஞ்சுநாத், தலையில் பலத்த காயமடைந்து 'கோமா'வுக்கு சென்று விட்டார்.
இதனால் பணியின் போது ரீல்ஸ் வீடியோ எடுக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
பஸ்சில் பயணம் செய்யும் பயணியரை பத்திரமாக அழைத்து செல்லும் பொறுப்பு, டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது உள்ளது. ஆனால் பணியின் போது ரீல்ஸ் வீடியோ எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பணி நேரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுப்போர் வேலையில் இருக்கவே தகுதி இல்லாதவர்கள்.
இனி பணி நேரத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ரீல்ஸ் வீடியோ எடுக்க கூடாது. இதை மீறுவோர் சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.