ADDED : ஜூன் 27, 2024 06:32 AM

குடகு மாவட்டம், குஷால்நகர் தாலுகா, பைலுகுப்பேவில் திபெத்திய முகாம் அமைந்துள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான திபெத்திய புத்த துறவிகள் வசிக்கின்றனர். புத்தர் தங்க கோவிலும் உள்ளது. இந்த கோவிலை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
இது போன்று, சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவில் இருந்து, 40 கி.மீ., தொலைவில் தொண்டென்லிங் திபெத்திய முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம், மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், 1974ல் அமைக்கப்பட்டது.
மைசூரு மறுவாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் உதவியால், திபெத்திய மக்களின் தங்கும் விடுதிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், மின் விளக்கு, சாலைகள், குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
இந்த முகாம், குடியிருப்பு மற்றும் விவசாயத்துக்கு சேர்த்து, 3,121 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் எல்லையில் உள்ளது.
அதுவும் கடல் மட்டத்தில் இருந்து, 3,345 அடி உயரத்தில் உள்ளதால், ரம்மியமான பசுமை நிறைந்த பகுதிகளை காணலாம். சீதோஷ்ண நிலை, ஆண்டு முழுதும் குளிர்ச்சியாகவே இருக்கும். ஆண்டுக்கு, 140 - 170 செ.மீ., மழை பெய்யும்.
முகாம் அமைத்த ஆரம்ப கட்டத்தில், 3,160 பேர் வசித்து வந்தனர். இறப்பு, குடிபெயர்தல் காரணமாக, தற்போது, 3,075 திபெத்திய மக்கள் வசிக்கின்றனர். மொத்தம் 22 கிராமங்களை கொண்டுள்ளது. 25 - 35 குடும்பங்களுக்கு ஒரு முகாம் அமைத்து கொண்டுஉள்ளனர்.
இவர்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். குறிப்பாக, கேழ்வரகு, சோளம், உருளைக்கிழங்கு அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.
குளிர் காலங்களில், ஸ்வெட்டர், குல்லா போன்ற உல்லன் ஆடைகள் விற்பனை செய்கின்றனர்.
மூன்று நர்சரி பள்ளிகள், ஒரு உயர்நிலைப் பள்ளி; ஒரு நவீன மருத்துவமனை, ஆயுர்வேத சிகிச்சை மையம்; ஐந்து முகாம்கள் இங்கு உள்ளன.
இத்துடன், ஒரு கூட்டுறவு சங்கம் உள்ளது. இவர்களுக்கு என்று தனியாக ரேஷன் கடை, டிராக்டர் பழுது பார்க்கும் மெக்கானிக் கடை, வாடகை பிரிவு, கை வினை பொருட்கள் மையமும் செயல்படுகின்றன.
ஒவ்வொரு முகாமிற்கும், மத்திய திபெத்திய நிர்வாகம் சார்பில், ஒரு பிரதிநிதி அமைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு குடியேற்ற அதிகாரி செயல்படுவார். இவருடைய கட்டுப்பாட்டில் தான் முகாமின் முழு பொறுப்பு இருக்கிறது. இது தவிர, ஒவ்வொரு கிராமத்துக்கும் தனி தனி தலைவர்கள் செயல்படுகின்றனர்.
எந்த விஷயமாக இருந்தாலும், இவர்கள் மூலம் குடியேற்ற அதிகாரிக்கு தகவல் செல்லும்.
தகவல் அளிப்பது, பண பிரச்னை இப்படி எதுவுமாக இருந்தாலும், இவர்கள் தான் தீர்த்து வைப்பர்.
இந்த திபெத்திய முகாமிற்கு, பெங்களூரு, மைசூரில் இருந்து பஸ், சொந்த வாகனம் மூலம் செல்லலாம்.
திபெத்திய மக்களின் வாழ்க்கை முறையை பார்க்கும் போது, புத்துணர்ச்சியை பெறலாம். அவர்கள் தனி உலகில் வாழ்வது போன்று நமக்கு தோன்றும். ஒருமுறையாவது இங்கு சென்று பார்ப்பது சிறப்பான அனுபவத்தை தரும்.
- நமது நிருபர் -