ADDED : ஏப் 27, 2024 11:04 PM
மங்களூரு: தாலி கட்டும் நேரத்தில், திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என, மணப்பெண் மறுத்ததால், திருமணம் நின்றது.
தட்சிணகன்னடா, கடபாவின் நெல்யாடி கோனாலு கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ், 27. இவருக்கு பன்ட்வாலின் சரஸ்வதி, 22, என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று முன் தினம் காலையில், காஞ்சன பெர்லாவில் உள்ள ஷண்முகர் கோவிலில் திருமணம் நடத்தி, மதியம் 1:00 மணிக்கு, மணமகன் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவில் மண்டபத்தில் திருமண சடங்குகள் நடந்தன. மணவறையில் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். உமேஷ் தாலி கட்ட முற்பட்டபோது, தடுத்து நிறுத்திய மணமகள், 'எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை' என, கூறி மறுத்தார். தாலி கட்ட அனுமதிக்கவில்லை.
அப்போது இரண்டு குடும்பத்தினரும், மணமகளுக்கு புத்திமதி கூறியும் சம்மதிக்கவில்லை. அதன்பின் இந்த விஷயம் போலீஸ் நிலையம் வரை சென்றது.
போலீசார் பேச்சு நடத்திய பின், தவறை உணர்ந்த மணமகள், திருமணத்துக்கு சம்மதித்தார். ஆனால் உமேஷ் சம்மதிக்கவில்லை. “மண்டபம் வரை வந்து, மானத்தை வாங்கிய பெண், எனக்கு தேவையில்லை,” என, கூறி சென்றுவிட்டார்.
வேறு வழியின்று இரண்டு குடும்பத்தினரும், திருமணத்தை நிறுத்திவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர். கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
மணமகனின் வீட்டில் 500 பேருக்கு, அசைவ, சைவ விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஐஸ்கிரீம் வரவழைக்கப்பட்டது. மணமகளின் அவசர புத்தியால், அனைத்தும் வீணானது.

