இடமாற்ற சான்றிதழ் தர மறுப்பு; மாணவர் துாக்கிட்டு தற்கொலை
இடமாற்ற சான்றிதழ் தர மறுப்பு; மாணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 22, 2024 06:46 AM

உடுப்பி,: இடமாற்ற சான்றிதழ் கொடுக்க பள்ளி நிர்வாகம் மறுத்ததால், மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடுப்பி குந்தாபூர் பைந்துார் அருகே ஷிரூர் கிராமத்தில் வசித்தவர் நிதின் ஆச்சாரி, 16. பைந்துார் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்தார்.
ஆண்டு இறுதி தேர்வில், தேர்ச்சியும் பெற்று இருந்தார். பி.யு.சி., சேர ஏற்பாடு செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் இடமாற்ற சான்றிதழ் வாங்க, பள்ளிக்கு சென்றார்.
ஆனால் இடமாற்ற சான்றிதழ் கொடுக்க, பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. வீட்டிற்கு சென்ற, நிதின் ஆச்சாரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி இருந்த கடிதத்தில், 'அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் எனக்கு அறிவுரை சொல்வீர்கள் என்று பயந்து உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களை மறைத்து விட்டேன். பள்ளிக்கு சென்று இடமாற்ற சான்றிதழ் கேட்ட போது, பள்ளியின் கண்காணிப்பு கேமராவை உடைத்ததாக என் மீது ஆசிரியர் குற்றம் சாட்டினார்.
'பெற்றோரை அழைத்து வந்து அபராதம் செலுத்தினால் தான், இடமாற்ற சான்றிதழ் தருவோம் என்றனர். உங்களை பள்ளிக்கு அழைத்து சென்று அவமானப்படுத்த விரும்பவில்லை. வேறு யாரிடம் சொல்வது என தெரியவில்லை' என எழுதி உள்ளார்.
இதையடுத்து நேற்று காலை பள்ளியின் முன்பு, நிதின் ஆச்சாரி உறவினர்கள், குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் டி.எஸ்.பி., பெல்லியப்பா சமாதானம் பேசி அனுப்பி வைத்தார். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடக்கிறது.

