ADDED : பிப் 25, 2025 05:21 AM
யாத்கிர்: அரசு பள்ளியில் தலித் மாணவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவ, சமையல் ஊழியர் மறுத்ததால், பள்ளியில் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் வலியுறுத்துகின்றனர்.
யாத்கிர், ஹுனசகியின் பாச்சிமட்டி கிராமத்தில் அரசு பள்ளியில், குடியரசு தின விழா நடந்த போது, தலைமை ஆசிரியர்மேடையில் தலித்துகளை அமர்த்தினர். இதனால் கோபமடைந்த கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் ஒருவர், ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.பஞ்சாயத்து கவுன்சிலரை கண்டித்தனர். அவரை பதவியில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தினர்.
இது போன்ற சம்பவம், தற்போது யாத்கிரில் நடந்துள்ளது. யாத்கிர், சஹாபுராவின் கோகி அருகில் உள்ள கரகள்ளி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
சமீபத்தில் இப்பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிட, 200 ஸ்டீல் தட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சாப்பிட்ட பின், தட்டுகளை சமையல் ஊழியர் கழுவ வேண்டும். ஆனால் தலித் மாணவர்கள் சாப்பிட்ட தட்டுகளை மட்டும் கழுவ, அவர் மறுக்கிறார். இதனால் தலித் பிரிவினர் கொதிப்படைந்துள்ளனர்; ஊழியரை கண்டித்தனர்.
இதையே காரணம் காட்டி, சமையல் ஊழியர் விடுமுறையில் சென்று விட்டார். நான்கைந்து நாட்களாக பள்ளியில் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பசியுடன் இருக்க கூடாது என்பதால், தினக்கூலி அடிப்படையில் ஊழியரை நியமித்து, உப்புமா, கேழ்வரகு கஞ்சி தயாரித்து கொடுக்கின்றனர்.