'நீட்' கருணை மதிப்பெண் குறித்து விசாரணை!: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
'நீட்' கருணை மதிப்பெண் குறித்து விசாரணை!: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
ADDED : ஜூன் 09, 2024 12:14 AM

'மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; கேள்வித்தாள் கசியவில்லை. அதே நேரத்தில், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழு விசாரிக்கும்' என, தேர்வை நடத்திய, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, கடந்த, மே, 5ம் தேதி நாடு முழுதும், 571 நகரங்களில், 4,750 மையங்களில் நடந்தது.
இதில், 23 லட்சத்து, 33,297 பேர் தேர்வு எழுதினர். தேர்வு நாளன்று, ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. ஆனால், அதை, என்.டி.ஏ., மறுத்தது. தேர்வு துவங்கி, இரண்டு மணி நேரம் கழித்து, சமூக வலைதளத்தில் அது பரவியதாக கூறியுள்ளது.
இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள், கடந்த, 4ம் தேதி வெளியிடப்பட்டது.
பிரச்னை
இதில், 67 மாணவர்கள், தேசிய அளவில், 720க்கு 720 மதிப்பெண்களுடன், முதலிடத்தைப் பிடித்தனர். மேலும், 718 மற்றும் 719 மதிப்பெண்களும் சிலருக்கு கிடைத்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தைச் சேர்ந்த, ஏழு மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், நுழைவுத் தேர்வு முறை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கட்ஆப் மதிப்பெண்களும் அதிகரித்துள்ளதால், பல மாணவர்களுக்கு, மருத்துவ கல்லுாரிகளில் சேரும் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர், கல்வித்துறை நிபுணர்கள், சமூக வலைதளங்களில் பிரச்னையை எழுப்பினர்.
பின்னர் இது, தேசிய அளவில், அரசியல் பிரச்னையாக மாறியது. நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பல எதிர்க்கட்சிகள், மத்திய அரசை குற்றஞ்சாட்டின. மறுதேர்வு நடத்தும்படியும் பல கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், எந்த முறைகேடும் நடக்கவில்லை என, என்.டி.ஏ., கூறி வருகிறது.
பிரச்னை தீவிரமாகியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை, டைரக்டர் ஜெனரல் சுபோத் குமார் சிங், நேற்று கூறியுள்ளதாவது:
நீட் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. கேள்வித்தாளும் கசியவில்லை. தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகள் என, அனைத்து நடைமுறைகளும் வெளிப்படையாகவே, நேர்மையாக நடந்துள்ளன.
கடந்த, மே, 5ம் தேதி நுழைவுத் தேர்வு நடந்தது. மாலை 4:30 மணியளவில், அதாவது தேர்வு துவங்கி, இரண்டு மணி நேரம் கழித்து, கேள்வித்தாளை, சமூக வலைதளத்தில் சிலர் பகிர்ந்துள்ளனர்.
கேள்வித்தாள் கசியவில்லை. சிலர், வேண்டுமென்றே, தேர்வு துவங்கிய இரண்டு மணி நேரம் கழித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனால், தேர்வு நடத்தும் நடைமுறை குறித்த எந்த சந்தேகமும் தேவையில்லை. இதில் எந்த சமரசமும் செய்யவில்லை.
தேர்வின்போது, ஒரு குறிப்பிட்ட கேள்விதான், மாணவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், நாடு முழுதும் உள்ள, 4,750 மையங்களில், ஆறு மையங்களில் மட்டுமே இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த மையங்கள், மேகாலயா, ஹரியானாவின் பகதுார்கர்க், சத்தீஸ்கரின் தண்டேவடா, பலுாத், குஜராதின் சூரத் மற்றும் சண்டிகரில் அமைந்திருந்தன.
உத்தரவு
அங்கு தேர்வு எழுதிய, 1,563 மாணவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, என்.சி.இ.ஆர்.டி.,யின் பழைய புத்தக விடையை அளிப்பதா, புதிய புத்தக விடையை அளிப்பதா என்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்வை முழுமையாக எழுதுவதற்கு நேரம் போதவில்லை என்று கூறினர்.
இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில், அவர்கள் இழந்த நேரம், எழுத முடியாத கேள்விகளின் எண்ணிக்கை அடிப்படையில் சலுகை மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதுபோல, எந்த பதிலை எடுத்துக்கொள்வது என்ற கேள்விக்கு, இரண்டு விடைகளும் சரி என்று எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப மதிப்பெண் வழங்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 1,563 மாணவர்களுக்கு மட்டுமே இந்த பிரச்னை ஏற்பட்டது.
இதனால், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம், அதிக மதிப்பெண்கள் விஷயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதுபோல, கட்ஆப் மதிப்பெண் விஷயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு, அதிக மாணவர்கள் தேர்வு எழுதியதே, கட்ஆப் அதிகரிக்க காரணம். வழக்கமாக, 3 - 4 மாணவர்களே, முழு மதிப்பெண்களை பெறுவர்.
இந்த முறை, 67 பேர் அதிக மதிப்பெண் பெற்றதும் அதுவே காரணமாகும். கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால், 718 மற்றும் 719 மதிப்பெண்கள் சிலருக்கு கிடைத்துள்ளன.
இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் தலைமையில், நான்கு பேர் அடங்கிய உயர் விசாரணை குழு அமைக்கப்படுகிறது.
ஒரு வாரத்துக்குள் அறிக்கை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், கவுன்சிலிங் மற்றும் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்
-- நமது சிறப்பு நிருபர் -.