'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் விரைவில் பதிவு துவங்கும்'
'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் விரைவில் பதிவு துவங்கும்'
ADDED : மார் 06, 2025 10:53 PM
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனாளிகளுக்கான பதிவு இந்த மாத இறுதிக்குள் துவங்கும் என, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை முந்தைய ஆம் ஆத்மி அரசு, டில்லியில் அமல்படுத்தவில்லை. மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுமென அக்கட்சித் தலைவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர்.
அதன்படி, ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்றதும், இந்தத் திட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறியதாவது:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனாளிகள் பதிவு செயல்முறை வரும் 8ம் தேதிக்குப் பிறகு துவங்கும். இதற்காக மத்திய அரசுடன் மாநில அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.
நகரின் சுகாதார அமைப்பில் ஏற்படும் அடிப்படை மாற்றங்கள் 100 நாட்களுக்குள் தெரியும்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கும் அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இரு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எந்த அரசு மருத்துவமனையிலும் மருந்து பற்றாக்குறையை ஏற்படாது.
முந்தைய ஆம் ஆத்மி தலைமையிலான அரசில் கிட்டத்தட்ட 2,500 மொஹல்லா கிளினிக்குகள் காகிதத்தில் மட்டுமே இருந்தன. அவற்றுக்கு வாடகை என்ற பெயரில் ஊழல் நடைபெற்றது.
இதைத் தடுக்க இதுபோன்ற கிளினிக்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறு செய்ததாகக் கண்டறியப்பட்ட எவரும் தப்பிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -