ஜாமின் நீட்டிப்பு மனுவுக்கு மறுப்பு முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு
ஜாமின் நீட்டிப்பு மனுவுக்கு மறுப்பு முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு
ADDED : மே 30, 2024 12:41 AM
புதுடில்லி:இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
டில்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மார்ச் 21ல், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஒன்றரை மாதத்துக்கும் மேல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கி, கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், ஜூன் 2ல், திஹார் சிறையில் சரணடையும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இடைக்கால ஜாமின் முடிவடைய இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'என் உடல் எடை இயல்புக்கு மாறாக அதிகளவில் குறைந்துள்ளது. இதற்கு சிறை அதிகாரிகள் தான் காரணம். எனவே, அவசியமான மருத்துவ பரிசோதனைகளை செய்ய, மேலும் ஏழு நாட்களுக்கு ஜாமினை நீட்டிக்க வேண்டும். ஜூன் 2க்கு பதில், 9ம் தேதி திஹார் சிறையில் சரணடைகிறேன்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று, ஜாமினை நீட்டிக்கக் கோரி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்ற பதிவாளர் மறுத்து விட்டார்.
மேலும் இது தொடர்பாக, விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.