ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் எதிர்த்த மனு நிராகரிப்பு
ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் எதிர்த்த மனு நிராகரிப்பு
ADDED : மே 04, 2024 01:14 AM
புதுடில்லி,வாக்காளர்களை குழப்புவதற்காக ஒரே பெயர் உடைய வேட்பாளர்களை நிறுத்தும் போக்கை கையாள தேர்தல் கமிஷன் சில வழிமுறைகளை வகுக்க உத்தரவிடக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் பெரிய தலைவர்களின் பெயர்களை உடைய ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்களை அதே தொகுதியில் களம் இறக்கும் நடைமுறையை சில அரசியல் கட்சிகள் நீண்ட காலமாக தேர்தல் வியூகமாக பின்பற்றி வருகின்றன.
வாக்காளர்களுக்கு ஏற்படும் பெயர் குழப்பம் காரணமாக, குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த தலைவருக்கு செல்ல வேண்டிய ஓட்டுகள் பிரியும் என்பதால் இந்த சூழ்ச்சியை செய்கின்றனர்.
சமீபத்தில் கூட, தமிழகத்தின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
இது போன்ற நடைமுறையை கையாள சில வழிமுறைகளை, கட்டுப்பாடுகளை வகுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''ராகுல் அல்லது லாலு பிரசாத் பெயரை வைத்துள்ள ஒரே காரணத்துக்காக அந்த பெயர் உடைய நபர் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது அவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகாதா?'' என, கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பு கூறியதை அடுத்து நீதிமன்றம் அனுமதி வழங்கியது.