ADDED : ஏப் 18, 2024 12:36 AM
புதுடில்லி:பல கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியவர்களை ஏமாற்றிய வழக்கில் 'யுனிடெக்' நிறுவன உரிமையாளர்கள் சஞ்சய் சந்திரா மற்றும் அஜய் சந்திரா ஆகியோரின் ஜாமின் மனுக்களை டில்லி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தலைநகர் டில்லி மற்றும் புறநகரில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பங்களாக்கள் கட்டி விற்ற, யுனிடெக் நிறுவனம், பல கோடி ரூபாய் செலுத்தியவர்களுக்கு வீடுகளை வழங்காமல் மோசடி செய்தது. மேலும், சட்டவிரோதப் பணப்பரிமாற்றமும் செய்து வந்தது.
மோசடி தொடர்பாக யுனிடெக் உரிமையாளர்கள் சஞ்சய் சந்திரா மற்றும் அஜய் சந்திரா ஆகிய இருவர் மீதும் 60 க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர்.
இதுகுறித்து விசாரித்த அமலாக்கத் துறை மோசடி, குற்றச்சதி, அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆதாயம் அடைதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் 2018ல் வழக்குப் பதிவு செய்தது. இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
இருவரும், கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி தீரஜ் மோர், “இருவருக்கும் எதிராக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,”எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

