'நாயக்' பட நாயகி போல் உணர்ந்தேன் முதல்வர் பதவி குறித்து ரேகா குப்தா பேச்சு
'நாயக்' பட நாயகி போல் உணர்ந்தேன் முதல்வர் பதவி குறித்து ரேகா குப்தா பேச்சு
ADDED : மார் 07, 2025 10:26 PM
புதுடில்லி:முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 'நாயக்' ஹிந்தி சினிமாவில் வரும் கதாநாயகியைப் போல உணர்ந்தேன்,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்சியில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
பா.ஜ., ஆட்சி நாக்கும் மாநிலங்களில் ஒரே பெண் முதல்வர் நான் தான். இந்தப் பதவிக்கு எனக்கு கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு அல்ல. நாட்டின் அனைத்து பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்தப் பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 'நாயக்' ஹிந்தி சினிமாவில் வரும் கதாநாயகியைப் போல உணர்ந்தேன்.
கட்சியிலும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களில் பல மூத்த தலைவர்கள் இருந்த போதும், முதல்வர் பதவிக்கு என்னை நியமித்தது குறித்து தவறான புரிதல் கொள்ளக் கூடாது. பா.ஜ.,வுக்கு கிடைத்த இந்த வெற்றி டில்லி மக்களாலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையாலும் கிடைத்தது.
எனக்குக் கிடைத்திருப்பது பதவி அல்ல. இது ஒரு பொறுப்பு. தேசியத் தலைநகர் டில்லியை வளர்ச்சி அடைந்த மாநகரமாக மாற்றுவதே பா.ஜ., அரசின் நோக்கம்.
ஒரு பெண்ணை முதல்வராக நியமித்து இருப்பது, பா.ஜ., மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையைப் பிரதிபலிக்கிறது. முடிவெடுக்கும் உயர் பதவியில் பெண்களை நியமிப்பதே அவர்களை மேம்படுத்துவதற்கான உண்மையான முயற்சி. பெண்கள் தலைமையிலான நாட்டின் வளர்ச்சி மற்றும் பெண்கள் தலைமையிலான ஆட்சியின் தொலைநோக்குப் பார்வையை மோடி உணர்ந்துள்ளார்.
டில்லியில் யமுனை நதி அடுத்த 3 ஆண்டுகளில் சுத்தம் செய்யப்பட்டு, படகு சவாரி துவக்கப்படும். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுக்குள் 80 முதல் -90 சதவீதம் மூன்று குப்பைக் கிடங்குகள் அகற்றப்படும்.
கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்குவது ஆகியவற்றை சீர்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.
தேசிய தலைநகரை வளர்ந்த நகரமாக மாற்ற பா.ஜ.,வின் இரட்டை இயந்திர அரசால்தான் முடியும் என்பதை டில்லி மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர்.
பா.ஜ., அரசு மீது டில்லி மக்கள் நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், டில்லியை நவீன நகரமாக மாற்றவும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வோம்.
டில்லி மாநகரைப் பொறுத்தவரை காற்று மாசுபாடு மிகப்பெரும் சவாலாக உள்ளது. நிபுணர்களுடன் ஆலோசித்து இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். காற்று மாசுக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கும் குப்பை எரித்தல் மற்றும் வாகனப் புகை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் என்ற போதிலும், நான் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைப் போல, அரண்மனையில் வாழ மாட்டேன். மக்களிடையே தான் வசிப்பேன். அரவிந்த் கெஜ்ரிவால் வசித்த அரசு பங்களா பொது நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.