4 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற உறவினர் கைது
4 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற உறவினர் கைது
ADDED : ஜூலை 23, 2024 11:32 PM

ராம்நகர் : நான்கு வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து, கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
ராம்நகர் மாவட்டம், மாகடியைச் சேர்ந்தவரின் 4 வயது பெண் குழந்தை, கடந்த 20ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. இரவு வெகு நேரமாகியும் குழந்தை வீட்டுக்கு வராததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடினர்.
அப்போது தங்கள் வீட்டுக்கு வந்திருந்த கவுரிபாளையத்தைச் சேர்ந்த உறவினர் இம்ரான் கான், குழந்தையை கடைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. அவருக்கு போன் செய்து கேட்டபோது, 'தனக்கு எதுவும் தெரியாது' என்று கூறிவிட்டு, மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டார்.
இதுதொடர்பாக குழந்தையின் தாய், மாகடி போலீசில் புகார் செய்தார். குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திப்பகொண்டனஹள்ளி அருகே பாறையின் அருகில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தையின் வீட்டுப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
குழந்தையை, இம்ரான் கான் அழைத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. கலாசி பாளையத்தில் பதுங்கியிருந்த இம்ரான் கானை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தையின் பெற்றோர் வீட்டுக்கு இம்ரான் கான் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.
சம்பவ தினத்தன்று, உறவினர் குழந்தையையும், அதனுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு குழந்தையையும் முதலில் கடைக்கு அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர், சிறிது நேரத்தில் மீண்டும் உறவினர் குழந்தையை மட்டும் அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.

