ADDED : மே 29, 2024 09:20 PM

கொப்பால்: பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, பெண் சிசு இறந்தனர். தனியார் மருத்துவமனையை கண்டித்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கதக் கஜேந்திரகடாவை சேர்ந்தவர் ஹிரேமத். இவரது மனைவி பிரதிபா, 25. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கொப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
பிரதிபாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், கொப்பால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிரதிபாவை டாக்டர்கள் பரிசோதித்தபோது, வயிற்றுக்குள் இருந்த சிசு இறந்தது தெரிந்தது. அறுவை சிகிச்சை செய்து பெண்சிசுவை வெளியே எடுத்தனர்.
பிரதிபாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று காலை அவரும் இறந்தார். பிரதிபா, பெண் சிசுவின் மரணத்திற்கு தனியார் மருத்துவமனை டாக்டர் மகேஷ் தான் காரணம் என கூறி, மருத்துவமனை முன் நேற்று காலை பிரதிபா உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கொப்பால் டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.