'நீட்' தேர்வுக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு
'நீட்' தேர்வுக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு
ADDED : ஜூலை 02, 2024 01:38 AM
புதுடில்லி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வின் திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு மே 5ல் நடந்தது. முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகின.
நீட் தேர்வு வரலாற்றில் இதுவரை இல்லாத அதிசயமாக, 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். அதில், ஹரியானாவில் இருந்து ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஆறு பேர் அடங்குவர்.
இது, தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்பியது. மேலும், மே 5 தேர்வின் போது, ஆறு மையங்களில் தேர்வு தாமதமாக துவங்கியதால் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் தலையிட்டு கருணை மதிப்பெண்ணை ரத்து செய்தது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவும் உத்தரவிட்டது.
மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு முந்தைய கருணை மதிப்பெண் சேர்க்காமல், முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண் வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, ஜூன் 23ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. கருணை மதிப்பெண் பெற்றிருந்த 1,563 மாணவர்களில், 813 பேர் தேர்வு எழுதினர்.
சத்தீஸ்கர் 291, குஜராத் 1, ஹரியானா 287, மேகாலயாவில் இருந்து 234 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வின் திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.