ஆசிரியர் பணி துறப்பு; குலத்தொழிலில் ஜமாய்க்கும் சிற்பி
ஆசிரியர் பணி துறப்பு; குலத்தொழிலில் ஜமாய்க்கும் சிற்பி
ADDED : செப் 14, 2024 11:42 PM

ஆசிரியர் பணியை துறந்து, தனது குலத்தொழிலான சிற்ப தொழிலில் இறங்கியவரின் வெண்கலம், வெள்ளி சிற்பங்கள், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் செல்கின்றன.
கோலார் மாவட்டம், தியாவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பூர்ணசந்திரா. இவரின் குலத்தொழில், கடவுள் சிற்பம் வடிமைப்பது. இவரின் தந்தை வெங்கடசாமாச்சாரி, 50 ஆண்டுகள் சிற்பியாக இருந்தார்.
ஆரம்பத்தில் அரசு வேலை கிடைக்க வேண்டுமென்றால், நன்றாக படிக்க வேண்டும். இதனால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என பூர்ணசந்திரா நினைத்தார்.
கலபுரகியில் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக, நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். 2010ல் விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பின், தனது குலத்தொழிலான சிற்பத் தொழிலை, தனது வீட்டிலேயே துவக்கினார்.
ஆனால், வெண்கலம், வெள்ளி சிலைகள் செய்ய துவக்கினார். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், தற்போது இதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தங்கள் கோவில்களுக்கு சிலைகள் வடிவமைக்க, கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
தலக்காவிரியில் வெள்ளி சிவலிங்கம், தர்மஸ்தலா கோவிலுக்கு நுழைவு வாயில் கதவு, பனசங்கரி கோவிலுக்கு தங்கம், வெள்ளிக்கவசம், சிருங்கேரி சாரதாம்பா கோவிலுக்கு பஞ்சலோகத்திலான சாரதா தேவி உட்பட பல்வேறு கோவில்களுக்கு சிலைகள் வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சிவா விஷ்ணு கோவிலுக்கு பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட காயத்ரி தேவி சிலையை வடிவமைத்து உள்ளார். சிலைகள் மட்டுமின்றி, தங்கம், வெள்ளியில் கவசங்களும் செய்து தருகிறார்.
மாநில அரசின் 'சிறந்த சிற்பி விருது' உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் வடிவமைத்த தங்கம், வெள்ளியிலான சிற்பங்கள், கவசங்களுடன் பூர்ணசந்திரா.
- நமது நிருபர் -