ADDED : ஆக 16, 2024 10:56 PM

பெங்களூரு : ரேணுகாசாமி கொலை வழக்கில், போலீசாருக்கு 70 சதவீத தடயவியல் அறிக்கை கிடைத்து இருப்பதாக, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. தொழில்நுட்ப ஆதாரங்களை சாட்சிகளாக சேகரித்து வைத்து உள்ளோம்.
ஹைதராபாத்
தடயங்களை பெங்களூரு, ஹைதராபாதில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். பெங்களூரு ஆய்வகத்தில் இருந்து, அனைத்து அறிக்கையும் கிடைத்து விட்டது.
ஹைதராபாத் ஆய்வகத்தில் இருந்து, அறிக்கை வர வேண்டி உள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீத அறிக்கை போலீசாருக்கு கிடைத்து விட்டது. முழு அறிக்கையும் கிடைத்த பின், அடுத்தகட்ட நடவடிக்கையை துவங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேணுகாசாமி கொலையில் கைதான, நடிகர் தர்ஷன் உட்பட 17 பேருக்கு எதிராக, போலீசார் சாட்சியங்களை தீவிரமாக சேகரித்து, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த பட்டனகெரே ஷெட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், தர்ஷன், பவித்ரா வீடுகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகள், கைதான 17 பேரின் மொபைல் டேட்டா தொடர்பான தகவல்கள், அனைவரின் ஆடியோ பரிசோதனை அறிக்கை மட்டும் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வர வேண்டி இருக்கிறது.
தலை முடி
ரேணுகாசாமியை கொலை செய்த பின், அவரது உடலை பட்டனகெரே ஷெட்டில் இருந்து, காமாட்சிபாளையாவிற்கு ஸ்கார்பியோ காரில் எடுத்து சென்றனர். அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த தலைமுடிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அந்த தலைமுடிகள் கைதாகி உள்ள கார்த்திக், ரவி, கேசவமூர்த்தி, நிகில் ஆகியோருடையது என்பதும் தெரிந்துள்ளது.

