பவித்ராவுக்கு 200 ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரேணுகாசாமி
பவித்ராவுக்கு 200 ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரேணுகாசாமி
ADDED : ஜூன் 29, 2024 04:34 AM

பெங்களூரு,: நடிகர் தர்ஷனின் தோழி பவித்ராவுக்கு 200 ஆபாச குறுந்தகவல்களை கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமி அனுப்பியது தெரிய வந்துள்ளது.
சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர். தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால், கடந்த 8ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் நடிகர் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேணுகாசாமியின் மொபைல் போனை, கொலையாளிகள் சாக்கடை கால்வாயில் வீசினர். எவ்வளவோ தேடியும் மொபைல் போன் கிடைக்கவில்லை. இதையடுத்து ரேணுகா சாமி பயன்படுத்திய மொபைல் நம்பரில், போலீசார் புது சிம் வாங்கி, கால்வாயில் வீசப்பட்ட, மொபைல் போனில் என்னென்ன இருந்தது என்று ஆய்வு செய்தனர்.
கடந்த பிப்ரவரி முதல் ஜூன் முதல் வாரம் வரை, ஐந்து மாதங்கள் பவித்ராவுக்கு, ரேணுகாசாமி 200 ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதுடன், சில ஆபாச வீடியோக்களையும் அனுப்பியது தெரிய வந்தது. இந்த கொலையில் மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
'ரேணுகாசாமி கொலை நடந்தபோது, சம்பவ இடத்தில் நான் இல்லை. ரேணுகா சாமிக்கு அறிவுரை மட்டும் கூறிவிட்டு அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டேன்' என, போலீசார் விசாரணையின்போது தர்ஷன் கூறியிருந்தார்.
ஆனால் சம்பவம் நடத்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, கொலை நடந்த இடத்தில், தர்ஷன் 50 நிமிடங்கள் இருந்ததும், பவித்ராவுக்கு அனுப்பிய ஆபாச குறுந்தகவலை காட்டி, ரேணுகாசாமியை, அவர் கண்மூடித்தனமாக தாக்கியதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுமதி மறுப்பு
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷனை பார்க்க, நேற்று காலை காரில் ஒரு இளம்பெண் வந்தார். ஆனால் அவருக்கு தர்ஷனை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
அந்த இளம் பெண் கூறுகையில், ''நான் தர்ஷனின் உறவினர். ஆனால் எனக்கு அவரை பார்க்க சில அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை. காரணமும் கூற மறுக்கின்றனர்,'' என்றார்.
ரவுடிக்கு 'நோ'
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷனுக்கு சேவை செய்வதற்காக, சிறையில் உள்ள பிரபல ரவுடிகள் நாகா, சைக்கிள் ரவி உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர். சைக்கிள் ரவியும், அவரது ஆதரவாளர்களும், சிறை ஊழியர்கள் உதவியுடன் தர்ஷனை சந்தித்துப் பேச முயன்று உள்ளனர். ஆனால் சைக்கிள் ரவியை சந்திக்க, தர்ஷன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

