ADDED : மார் 31, 2024 05:03 AM

மாண்டியா, : ''மாண்டியா காங்கிரஸ் வேட்பாளரை ஆதரியுங்கள். இல்லை என்றால் நடுநிலையுடன் செயல்படுங்கள்,'' என, எம்.பி., சுமலதாவுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திர சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் ஏற்பட்ட மோதல், தேசிய அளவில் எதிரொலித்தது. முதல்வராக இருந்த குமாரசாமி மகன் நிகில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து, நடிகையான சுமலதா, சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு பா.ஜ., ஆதரவு இருந்தது. இதனால் தேர்தல் களத்தில், அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.
ஒரு வழியாக நிகிலை தோற்கடித்து, சுமலதா வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு காங்கிரசும் மறைமுகமாக உதவியது. முதல்வர் சித்தராமையாவே இதை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் மாண்டியா மலவள்ளியில் நேற்று நடந்த, காங்கிரஸ் கூட்டத்தில் எம்.எல்.ஏ., நரேந்திர சாமி பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலின்போது, ஓட்டு சேகரித்த சுமலதா, மாண்டியாவின் மருமகள்; மலவள்ளி ஹுச்சேகவுடரின் மருமகள் என்று கூறினார். சுயமரியாதைக்காக தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறினார். இதனால் அவர் வெற்றி பெற்றார்.
எங்களுடன் கூட்டணியில் இருந்த, ம.ஜ.த., சார்பில் நிகில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன் என, நான் வெளிப்படையாக கூறி இருந்தேன். சுமலதாவின் வெற்றிக்காக நாங்கள் வேலை செய்தோம்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டார் சந்துருவை, சுமலதா ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் நடுநிலையாக செயல்பட வேண்டும்.
ஹுச்சேகவுடாவின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை, சுமலதா செய்ய கூடாது. உண்மையான சுயமரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். மலவள்ளி மக்களையும் அவமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

