இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றிய 57 சிறார்கள் மீட்பு
இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றிய 57 சிறார்கள் மீட்பு
ADDED : மே 30, 2024 11:58 PM

காஜியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில், யாசின் குரேஷி என்பவர் இன்டர்நேஷனல் அக்ரோ புட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம், இறைச்சிகளை வெட்டி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்நிறுவனத்தில் மேற்கு வங்கம் மற்றும் பீஹாரைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனுக்கு புகார் வந்தது. அவர்கள், இது குறித்து காஜியாபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தினர்.
இரு துறையினரும் இணைந்து, நேற்று சோதனை நடத்தினர். அங்கு கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் பணியில் சிறுவர்களை ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வேலையில் இருந்த 31 சிறுமியர், 26 சிறுவர்கள் என, 57 பேரை போலீசார் மீட்டனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
குடும்ப பொருளாதார சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவர்களிடம், வேலை வழங்குவதாக கூறி அழைத்து வந்துள்ளனர்.
என்ன வேலை என்பது பற்றி தெரியப்படுத்தாமல், அவர்களை அழைத்து வந்துள்ளனர். சிறுவர்களை இங்கே வேலைக்கு அழைத்து வந்த நபர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.