ADDED : ஜூன் 29, 2024 04:31 AM

குடகு: குடகு அருகே மழை வெள்ளத்தில் சிக்கிய 60 குடும்பத்தினரை, பைபர் படகுகள் மூலம், வனத்துறையினர் மீட்டனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, குடகு ஷிவமொகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக குடகு, தட்சிண கன்னடாவில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கனமழையால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மட்டும் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மங்களூரு உச்சிலா - பட்டபாடி பகுதியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. இதில் கடலோரம் இருந்த ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது.
மங்களூரு காவூர் சுஜிகல் கிராமத்தில், 30 அடி உயர மலையில் 16 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது அப்பகுதியில் பெய்தாலும் கனமழையால், மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறு வீடுகள் எந்த நேரத்திலும் இருந்து விழும் நிலையில் உள்ளன.
அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றும் பணியில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
உத்தர கன்னடாவின் கார்வார் டேவ்பாக் கடற்கரை நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது.
இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள நான்கு சொகுசு விடுதி வீடுகள் பலத்த சேதமடைந்தன.
டேவ்பாக் பகுதியில் கற்றாழை செடிகள் தோட்டத்தில் மழை நீர் புகுந்தது. இதனால் 8 ஏக்கரில் கற்றாழை செடிகள் நாசமடைந்தன.
குடகு மடிகேரி அருகே தோனிகடவு- பேவூர் கிராமங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இரு கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்ததால், கிராமங்களில் வசித்த 60 குடும்பத்தினரை, வனத்துறையினர் பைபர் படகு மூலம் மீட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் பாகமண்டலவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழை எதிரொலியாக தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்டும், குடகு, சிக்கமகளூரு, ஷிவமொகா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், பல்லாரி, ஹாவேரி, தார்வாட், ஹாசன், மைசூரு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி பாலத்தில் தடை
மக்களின் பாதுகாப்பை கருதி, குடகின் சில சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணியருக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
குஷால்நகரின் நஞ்சராயபட்டணா அருகில் உள்ள, துபாரே யானைகள் முகாமில் சுற்றுலா பயணியருக்கு, வனத்துறை தடை விதித்தது. தற்போது பிரபலமான கண்ணாடி பாலத்துக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.
மடிகேரியின், கே.நிடுகனே கிராமம் மற்றும் உடத்வமொட்டே கிராமத்தில் கண்ணாடி பாலம் உள்ளது. இந்த இடங்கள் பிரபலமான சுற்றுலா தலமாகும்.
சுற்றுலா பயணியருக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். போதிய பாதுகாப்பு இல்லாமல், கண்ணாடி பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது தொடர் மழை பெய்வதால், கண்ணாடி பாலங்களுக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல. செப்டம்பர் 15 வரை, கண்ணாடி பாலங்களில் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

