சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... சுதந்திர தின சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு துவக்கம்
சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... சுதந்திர தின சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு துவக்கம்
ADDED : ஆக 14, 2024 08:22 AM

சென்னை: சுதந்திர தின விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னை - நாகர்கோவில், சென்னை - கொச்சுவேலி வழித்தடங்களில் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை
நாடு முழுவதும் நாளை (ஆக.,15) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு பொது விடுமுறையாகும். நாளை வியாழக்கிழமை என்பதால், வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுப்பு எடுத்தால், சனி மற்றும் ஞாயிறு தினங்களுடன் சேர்த்து தொடர் விடுமுறை வருகிறது.
சிறப்பு ரயில்
இதனால், பெரும்பாலானோர் இந்தத் தொடர் விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். எனவே, பயணிகளின் வசதிக்காக, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது.
புறப்பாடு
இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண் 06055), நாளை (ஆக.,15) மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றடையும். அதேபோல, நாளை பிற்பகல் 3.50 மணிக்கு நாகர்கோவில் ரயில்நிலையத்தில் இருந்து கிளம்பும் சென்னை - நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் எண் (06056), வெள்ளிக்கிழமை (ஆக.,16) காலை 5.10 மணிக்கு எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
நிறுத்தங்கள்
ஆவடியில் பயணத்தை தொடங்கும் இந்த ரயில் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
முன்பதிவு
சென்னை - நாகர்கோவில் மார்க்கமாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது. இதேபோல, சென்னை - கொச்சுவேலி வழித்தடத்திலும், இன்றும், ஆக.,21ம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.