ADDED : ஆக 22, 2024 04:12 AM
மங்களூரு: தட்சிண கன்னடா, பெல்தங்கடி கொல்பாடி கிராமத்தில் வசித்தவர் பாலகிருஷ்ண பட், 73. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவியும் ஆசிரியை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
பாலகிருஷ்ண பட்டின் இரண்டு மகன்கள், ஒரு மகளுக்கு திருமணம் ஆகி தனித்தனியே தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இதனால் பாலகிருஷ்ண பட் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும், பாலகிருஷ்ண பட் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரிந்தது. கொலையாளி யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. வீட்டின் கதவு திறந்து இருந்ததால், பாலகிருஷ்ண பட்டுக்கு நன்கு தெரிந்தவர்களே கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை நடக்கிறது.