விதிமுறையை எப்போதும் மீறவில்லை ஓய்வு பெற்ற திஹார் சிறை இயக்குனர் பேட்டி
விதிமுறையை எப்போதும் மீறவில்லை ஓய்வு பெற்ற திஹார் சிறை இயக்குனர் பேட்டி
ADDED : மே 02, 2024 12:56 AM

புதுடில்லி:“நான் எப்போதும் விதிமுறைப்படிதான் செயல்பட்டேன்,” என, டில்லி திஹார் சிறை இயக்குனர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற சஞ்சய் பனிவால் கூறினார்.
கடந்த 1989ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி அடைந்த சஞ்சய் பனிவால், 37 ஆண்டு போலீஸ் பணியில் இருந்து நேற்று முன் தினம் ஓய்வு பெற்றார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 4ல் டில்லி திஹார் சிறைகளின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்ம் 2018 - 2021ல் சண்டிகர் டி.ஜி.பி.,யாக பதவி வகித்தார். டில்லி மாநகரப் போலீஸ் சிறப்பு கமிஷனர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு உட்பட பல இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு எஸ்.பி., மிசோராம் மாநிலத்தில் டி.ஐ.ஜி., அருணாசல பிரதேசத்தில் ஐ.ஜி., ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் திஹார் சிறை இயக்குனர் சந்தீப் கோயல் நீக்கப்பட்டார். இதையடுத்து, அந்தப் பதவியை சஞ்சய் பனிவால் ஏற்றுக் கொண்டார்.
திஹார் பணி புரிந்த காலம் குறித்து சஞ்சய் பனிவால் கூறியதாவது:
இரு இக்கட்டான நேரத்தில்தான் திஹாரில் நியமிக்கப்பட்டேன். நிர்வாக ரீதியாக சில பிரச்னைகளைத் தீர்ப்பது ஒரு சவாலாகவே இருந்தது. என்னால் முடிந்தவரை கடும் முயற்சி செய்து பல பணிகளைத் செய்தேன்.
தாதா தில்லு தாஜ்புரியா கொலை நடந்த போதுதான் சிறையில் உள்ள குறைபாடுகள் தெரிய வந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பல மாற்றங்களைச் செய்தோம்.
பல திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களைச் செய்தேன். எனக்குப் பின் வரும் அதிகாரிகளும் இந்தச் சீர்திருத்தங்களைத் தொடருவர் என நம்புகிறேன்.
திஹார் சிறையில் விதிமுறைப்படிதான் செயல்பட்டேன். எந்த இடத்திலும் விதிமுறையை மீறவில்லை.
திஹாரில் வைக்கப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்குவது சிறை டாக்டர்களின் முடிவு. அதில் நான் முடிவு எடுக்க முடியாது. எய்ம்ஸ் டாக்டர்கள் பரிந்துரைத்த பின் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

