ADDED : ஜூன் 30, 2024 10:41 PM

மாண்டியா : ''பா.ஜ., ஆட்சியின்போது ஏழைகளுக்கு ஒரு வீடு கட்டி கொடுத்ததை காண்பித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்,'' என, வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமது கான் சவால் விடுத்துள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த 2013 முதல் 2018 வரை, காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, ராஜிவ் காந்தி யோஜனா திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு வழங்குவதற்காக 7.50 லட்சம் வீடுகள் கட்ட உத்தரவிட்டார். அப்போது 2.36 லட்சம் வீடுகள் கட்டும் பணி துவங்கியது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகிய மூன்று பேர் முதல்வர்களாக இருந்தனர்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் கட்ட துவங்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்கவில்லை. பா.ஜ., ஆட்சியின் போது ஏழைகளுக்கு ஒரு வீடு கூட கட்டி தரவில்லை. ஏதாவது ஒரு வீட்டை கட்டி கொடுத்து இருக்கிறோம் என்று காண்பித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
ஒரு வீடு கட்ட 7.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் தலா 1.50 லட்சம் ரூபாய் கொடுக்கிறது. மீதம் 4 லட்சம் ரூபாயை பயனாளிகள் தான் கொடுக்க வேண்டும். ஆனால், அவ்வளவு பெரிய தொகையை ஏழை மக்களால் கொடுக்க முடியாது.
இது பற்றி முதல்வர் சித்தராமையாவிடம் பேசினேன்.
பயனாளிகள் செலுத்த வேண்டிய நான்கு லட்சம் ரூபாயை செலுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் பேசுவதாக கூறினார். வீட்டு வசதி துறைக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.