ADDED : மே 07, 2024 11:09 PM

பெங்களூரு: வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் கைதான முன்னாள் பிரதமர் மகன் ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடகாவில் ம.ஜ.த.,வை சேர்ந்த, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, 66. ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா எம்.எல்.ஏ.,வான இவரது மகன் பிரஜ்வல், 33. ஹாசன் எம்.பி.,யாக உள்ளார்.
இந்நிலையில் தந்தை - மகன் மீது வீட்டு வேலைக்கார பெண், கடந்த 27ம் தேதி ஹொளேநரசிபுரா போலீசில், பாலியல் புகார் அளித்தார். இதன்படி இருவர் மீதும், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவானது.
இன்னொரு வேலைக்கார பெண்ணை கடத்தியதாக, ரேவண்ணா மீது மைசூரு கே.ஆர்.நகர் போலீசில் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் ரேவண்ணாவை, சிறப்பு விசாரணை குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
இந்நிலையில் சிறப்பு விசாரணைக்குழு காவலில் உள்ள ரேவண்ணாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.