சிறையிலும் ஹாசன் வளர்ச்சி பற்றியே ரேவண்ணா சிந்திக்கிறார்! ஜி.டி.தேவகவுடா புகழாரம்
சிறையிலும் ஹாசன் வளர்ச்சி பற்றியே ரேவண்ணா சிந்திக்கிறார்! ஜி.டி.தேவகவுடா புகழாரம்
ADDED : மே 14, 2024 04:33 AM

பெங்களூரு: “சிறையில் இருந்தாலும், ஹாசன் வளர்ச்சி பற்றியே, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா சிந்திக்கிறார்,” என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரேவண்ணாவை, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, நேற்று சென்று சந்தித்து, தைரியம் கூறினார்.
பின், அவர் கூறியதாவது:
சிறைக்கு சென்றதில் இருந்து, ரேவண்ணாவை பார்க்க முடியவில்லை. அவரை சந்தித்து ஆரோக்கியத்தை விசாரிக்க வேண்டும் என, நினைத்தேன்.
எந்த தவறும் செய்யாமல், வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ரேவண்ணா, அதை நினைத்து வருத்தமடைந்து 10 நிமிடங்கள் கண்ணீர் சிந்தினார். சிறிது நேரம் பேசினோம். சேர்ந்து டீ குடித்தோம். பழைய விஷயங்களை அசை போட்டோம்.
சிறையில் இருந்தாலும், அவருக்கு ஹாசன் வளர்ச்சி பற்றிய சிந்தனையே அதிகம் உள்ளது. 'நான் என்ன தவறு செய்தேன்? கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணுடன் பேசியே, ஆறு ஆண்டுகள் ஆகின்றன. என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். நான் ஏதாவது தவறு செய்திருந்தால், தண்டனை கொடுத்திருக்கலாம். எந்த தவறும் செய்யாமல், என்னை சிறையில் போட்டுவிட்டார்களே?' என, என்னிடம் கூறி கலங்கினார்.
'பென்டிரைவ் தொடர்பாக, அனைத்து விஷயங்களும் எஸ்.ஐ.டி., விசாரணையில் வெளிச்சத்துக்கு வரும்' என, முதல்வர் சித்தராமையா, தன் முதுகை தானே தட்டிக்கொள்கிறார். எங்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது. பென்டிரைவை வெளியிட்டவர்களிடம் விசாரணையை துவக்கியுள்ளனர். அனைத்தும் அம்பலமாகும். இதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
பிரஜ்வல் தொடர்பாக, நாங்கள் எதுவும் பேசவில்லை. ரேவண்ணாவும் கூட, பிரஜ்வலை பற்றி என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
இவ்வாறு இவர் கூறினார்.

