ADDED : ஆக 29, 2024 02:57 AM

பெங்களூரு : வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணாவுக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் அளித்த ஜாமினை ரத்து செய்ய கோரி, எஸ்.ஐ.டி., தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஹாசன், ஹொளேநரசிப்புரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் கடந்த மே 13ம் தேதி அவருக்கு ஜாமின் கிடைத்தது.
இந்நிலையில் ரேவண்ணாவுக்கு அளித்த ஜாமினை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., மனு செய்தது.
அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார். கடந்த 1ம் தேதி நடந்த விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை நேற்று ஒத்திவைத்தார்.
நேற்று மனு மீது விசாரணை நடந்தது. எஸ்.ஐ.டி., தரப்பில் ஆஜரான வக்கீல் ரவிவர்ம குமார் வாதாடுகையில், ''தன் மகன் மீது புகார் அளிக்க கூடாது என்பதற்காக, வேலைக்கார பெண்ணை ரேவண்ணா கடத்தி உள்ளார். சாட்சிகளை அழிக்கும் முயற்சி நடந்து உள்ளது. இதுபோன்ற வழக்கில் சாட்சிகளை அழிப்பதை தடுக்கும் வகையில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க கூடாது.
''அவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பிரிவு 164ன் கீழ் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது. ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது,'' என்றார்.
ரேவண்ணா சார்பில் ஆஜரான வக்கீல் நாகேஷ் வாதாடுகையில், ''பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணை, எனது மனுதாரர் அழைத்து வர கூறியதாக கூறி, உறவினர் அழைத்து சென்றார். இது தண்டனைக்கு உரிய குற்றமா. பாதிக்கப்பட்டவர் மைனர் இல்லை. அவருக்கு எந்த மிரட்டலும் விடுக்கப்படவில்லை. எனது மனுதாரருக்கு ஜாமின் கிடைத்ததில், என்ன தவறு உள்ளது,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ரேவண்ணாவுக்கு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை உறுதி செய்ததுடன், எஸ்.ஐ.டி., தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.