ADDED : ஜூன் 28, 2024 12:55 AM

புதுடில்லி, தெலுங்கானா காங்கிரசின் மாநில தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைவதால், புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என, கட்சி தலைமையை அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2021ல், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக, தற்போது முதல்வராக உள்ள ரேவந்த் ரெட்டி நியமிக்கப்பட்டார். அவரது மூன்றாண்டு பதவிக்காலம் வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி கூறியதாவது:
என் மூன்றாண்டு பதவிக் காலத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை வெற்றிகரமாக வழிநடத்தினேன்.
என் பதவிக்காலம் முடிவதற்குள் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.
முதல்வராக பணியாற்றுவதால், தலைமை பொறுப்பில் இருந்து விடுவித்து தகுதியான புதிய தலைவரை நியமிக்குமாறு வலியுறுத்தினேன். கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கானாவில், ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதி களில், 64 இடங்களை கைப்பற்றியது. அதேபோல், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 17 தொகுதிகளில், எட்டு இடங்களில் வென்றது.