கவிதா ஜாமின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் ரேவந்த்
கவிதா ஜாமின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் ரேவந்த்
ADDED : ஆக 30, 2024 11:12 PM

ஹைதராபாத்: டில்லி மதுபான ஊழல் வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு அரசியல் அர்த்தம் கற்பித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து, நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார்.
டில்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில், பாரத் ராஷ்டிர சமிதி மேலவை உறுப்பினர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரசைச் சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'பா.ஜ., மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படியே, கவிதாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது' என, கூறினார்.
இந்நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி மீதான லஞ்ச வழக்கு நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில் ஆஜரான ரேவந்த் ரெட்டி வழக்கறிஞர்களிடம், கவிதா ஜாமின் தொடர்பான அவரது கருத்துக்கு நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
'உங்கள் அரசியல் போட்டிக்கு நீதிமன்றத்தை ஏன் இழுக்கிறீர்கள். அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர் இது போன்று கருத்து கூறலாமா? இது நீதிமன்றம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மக்களிடையே ஏற்படுத்தாதா?' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 'நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது எனக்கு உயர்ந்த மரியாதை உண்டு. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீதும் நம்பிக்கை கொண்டவன் நான். என் கருத்துக்காக நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' என, கூறியுள்ளார்.