தமிழர்களின் ரத்த வியர்வையால் கர்நாடக அரசுக்கு வருவாய் தமிழ் ஆர்வலர் எஸ்.டி.,குமார் உணர்வுபூர்வ பேச்சு
தமிழர்களின் ரத்த வியர்வையால் கர்நாடக அரசுக்கு வருவாய் தமிழ் ஆர்வலர் எஸ்.டி.,குமார் உணர்வுபூர்வ பேச்சு
ADDED : செப் 23, 2024 05:41 AM

ஹலசூரு: ''கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள், தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி வேலை செய்வதால் தான், கர்நாடக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது,'' என்று, தமிழ் ஆர்வலர் எஸ்.டி.,குமார் ஆவேசமாக பேசினார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் அக்., 20ம் தேதி, கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு நடக்கிறது.
மாநாடு ஏற்பாடுகள் குறித்து, பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரை அருகிலுள்ள யாதவா சங்கத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் ஆர்வலருமான எஸ்.டி.குமார் தலைமை வகித்து பேசியதாவது:
முன்பதிவு
சிங்கப்பூர், மலேஷியா தமிழர்கள் போல, நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கன்னடர் - தமிழர் மாநாட்டை நடத்த முடிவு செய்ததும், கர்நாடகாவின் பல மாவட்டங்களில் வசிக்கும், தமிழர்களை நேரில் சந்தித்தோம். மாநாடு குறித்து விளக்கினோம்.
வெளிமாவட்டங்களில் வசிப்பவர்களில், மாநாட்டிற்கு வர பஸ், வேன்களை முன்பதிவு செய்து உள்ளனர்.
மாநாட்டு மலர் வெளியிடுகிறோம். இதற்காக நாங்கள் யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. இக்கூட்டத்தில் கலந்து இருப்பவர்கள், உங்களால் முடிந்த விளம்பரங்களை வாங்கி கொடுங்கள். மாநாட்டு மலர் வரலாற்றில் இடம் பெறும்.
மாநாட்டிற்கு முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியுரப்பா வருகின்றனர். மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமியும் வரும் வாய்ப்பு உள்ளது.
அமைச்சர் தினேஷ் குண்டுராவை சந்தித்து உள்ளோம். சிவாஜிநகர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் ஆதரவு தெரிவித்து உள்ளார். இன்னும் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க உள்ளோம்.
கர்நாடக ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடாவையும் சந்தித்து பேசினோம். இன்னும் பல கன்னட அமைப்புகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். கன்னடர்கள், தமிழர்கள் ஒற்றுமையாக உள்ளோம்.
இம்மாநாடு சாதாரணமாக இருக்க கூடாது. கன்னடரும், தமிழரும் கைகோர்த்து வாழும் சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்று, நாராயண கவுடாவிடம் கூறினேன். அவரும் எனது கருத்தை ஏற்று கொண்டார். இந்த மாநாடு ஒரு திருப்புமுனையாக இருக்கும். மாநாட்டில் நடக்கும் கண்காட்சியில் தமிழர்கள் பற்றிய வரலாறு இருக்கும்.
அரசுக்கு வருவாய்
இம்மாநாடு முடிந்ததும், கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்துகிறோம். இதில் எத்தனை பேர் பட்டதாரிகள்; எத்தனை பேர் உயர் பதவிகளில் இருக்கின்றனர் என்று கண்டறிவோம். கணக்கெடுப்பு அறிக்கையை, கர்நாடக அரசிடம் சமர்பித்து தமிழர்களுக்கும் அரசு சலுகைகள் கொடுங்கள் என்று கேட்போம்.
சிக்கமகளூரு காபி தோட்டங்கள், ஷிவமொக்கா பாக்கு தோட்டங்களில் வேலை செய்வோரில் பெரும்பாலோனார் தமிழர்கள். கர்நாடகாவில் அனைத்து பகுதிகளிலும், தமிழர்கள் வேலை செய்கின்றனர்.
இலவச பயணம்
கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி வேலை செய்வதால் தான், கர்நாடக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
தங்கத்தை அள்ளி கொடுத்த தங்கவயல் தமிழர்கள் தேய்ந்து, ஓய்ந்து விட்டனர். தமிழர்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆதர்ஷ் ஆட்டோ சங்க தலைவர் சம்பத் பேசுகையில், ''மாநாட்டில் கலந்து கொள்ள வருவோரை அழைத்து வருவதற்கு பஸ், ரயில் நிலையங்களில் 20 ஆட்டோக்களை நிறுத்துவோம். இது இலவசம். நான் ஐந்து பேரிடம் இருந்து, மலருக்காக விளம்பரம் வாங்கி தருகிறேன்,'' என்றார்.
பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேந்திரன் பேசுகையில், ''மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் வழங்குகிறேன். சிவாஜிநகர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் மூலம், முதல்வர் சித்தராமையாவை மாநாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன்,'' என்றார்.
அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரசின் தென் மாநில ஒருங்கிணைப்பாளர் பையப்பனஹள்ளி ரமேஷ் பேசுகையில், ''தமிழர் - கன்னடர் மாநாடு கண்டிப்பாக மிக பெரிய வெற்றி பெறும்.
தமிழர்களுக்கு கவுரவம்
இம்மாநாட்டால் தமிழர்களுக்கு கவுரவம், பெருமை கிடைக்கும். மாநாட்டை வெற்றிகரமாக நடத்த, அனைத்து ஒத்துழைப்பும் தருவேன்,'' என்றார்.
தன்னுரிமை மனமகிழ் மன்ற பொதுச்செயலர் ராஜசேகர், கர்நாடக தமிழ் பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்க தலைவர் தனஞ்செயன், கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பின் தலைவர் செந்தில் குமார் உட்பட பல தமிழ் அமைப்புகள், சங்கங்களின் பிரமுகர்கள், செயின்ட் ஜோசப் பல்கலைக்கழக தமிழ் பேராசிரியை சரளா ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.