முதியோர் ஓய்வூதியம் மீட்டெடுப்பு அமைச்சர் அதிஷி தகவல்
முதியோர் ஓய்வூதியம் மீட்டெடுப்பு அமைச்சர் அதிஷி தகவல்
ADDED : ஆக 23, 2024 07:49 PM

புதுடில்லி,:“முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. மத்திய பா.ஜ., அரசு 5 மாதங்களாக முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் தன் பங்களிப்பை வழங்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது,”என, அமைச்சர் அதிஷி சிங் கூறினார்.
இதுகுறித்து, டில்லி வருவாய்த் துறை அமைச்சர் அதிஷி சிங் கூறியதாவது:
டில்லியில் முதியோர் ஓய்வூதியம் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. அதில், 90,000 பேர் நிலுவைத் தொகையை நேற்று முன் தினம் பெற்றுள்ளனர். மீதியுள்ள 10,000 பேருக்கு விரைவில் வழங்கப்படும்.
முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் டில்லி அரசு 2,200 ரூபாயும் மற்றும் மத்திய அரசு 300 ரூபாயும் செலுத்துகிறது. ஆனால், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு 5 மாதங்களாக தன் பங்கை இந்தத் திட்டத்துக்கு வழங்கவில்லை. இதனால், ஓய்வூதியம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்குத் தொகை மிகவும் குறைவு என்றாலும் அதையும் முடக்கி வைத்திருப்பதால், பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகை அனுப்ப முடியவில்லை.
பல போராட்டங்களுக்குப் பிறகே, முதியோர் ஓய்வூதிய திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீட்டெடுத்துள்ளது.
டில்லியில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள்.
இந்த திட்டத்தின் கீழ், 60 முதல் 69 வயதுக்கு உட்பட்டோருக்கு முதியோர் ஓய்வூதியம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மையினருக்கு மாதந்தோறும் கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்ப்பு
பா.ஜ., போராட்டம்
இதற்கிடையில்,
டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் அக்கட்சியினர் நேற்று, சமூகநலத் துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய சச்தேவா, “முறைகேடுகள் நிறைந்த ஆம் ஆத்மி அரசு பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. முதியோர் ஓய்வூதியம் எட்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன் பா.ஜ., இந்தப் பிரச்னையை எழுப்பியது. இதையடுத்து, 5 மாதங்களாக நிலுவையில் இருந்த ஒரு லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டதாக நிதியமைச்சர் அதிஷி கூறியுள்ளார்,”என்றார்.
டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, லோக்சபா எம்.பி., யோகேந்தர் சந்தோலியா, முன்னாள் எம்.பி., ரமேஷ் பிதுரி, பா.ஜ., பொதுச் செயலர் விஷ்ணு மிட்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.