பண மோசடி வழக்கில் ஆவணங்களை கேட்க உரிமை உள்ளதா: நீதிமன்றம் சரமாரி கேள்வி
பண மோசடி வழக்கில் ஆவணங்களை கேட்க உரிமை உள்ளதா: நீதிமன்றம் சரமாரி கேள்வி
ADDED : செப் 05, 2024 12:50 AM

புதுடில்லி: பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர், வழக்குக்கு தேவைப்படாத ஆவணங்களை கேட்பதற்கு உரிமை உள்ளதா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பண மோசடி தொடர்பான புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட சரளா குப்தா என்பவர், தன்னிடம் பறிமுதல் செய்யப்பட்ட, வழக்குக்கு தேவையில்லாத ஆவணங்களை திருப்பித் தர அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
கடும் வாதங்கள்
இதில், ஆவணங்களை தர தேவையில்லை என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் அபய் ஓகா, அசானுதீன் அமானுல்லா, ஏ.ஜி.மாஷி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமர்வுக்கும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவுக்கும் இடையே கடும் வாதங்கள் நடந்தன.
அமர்வு கூறியதாவது:
பண மோசடி தொடர்பான புகாரில், விசாரணைக்கு தேவையில்லாதவை என்று அமலாக்கத் துறை கருதும் ஆவணங்களை ஏன் திரும்ப ஒப்படைக்கக் கூடாது? மேலும், இது, அரசியலமைப்பு சட்டத்தின், 21வது பிரிவு வழங்கிய தனிமனித உரிமைகளை மீறுவதாக அமையாதா?
ஜாமின் கேட்க அல்லது தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய அவர்கள் மனு தாக்கல் செய்வதற்கு இந்த ஆவணங்கள் தேவைப்படலாம்.
தற்போதைய நவீன வசதிகளை பயன்படுத்தி, பறிமுதல் செய்த ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்து வைத்துக் கொண்டு, ஏன் திருப்பித் தரக் கூடாது?
ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு கெடுபிடி காட்ட வேண்டும்; சற்று தாராளமாக நடந்து கொள்ளலாமே?
இவ்வாறு அமர்வு கேள்வி எழுப்பியது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இதற்கு பதிலளித்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிட்டதாவது:
இதில் தனிமனித உரிமை என்ற வாதம் வராது. குற்றஞ்சாட்டப்பட்டவர் விரும்பினால், குறிப்பிட்ட ஆவணத்தை நீதிமன்றம் பார்த்து பரிசீலிக்கும்படி கோரலாம். அமலாக்கத் துறையிடம் எந்தெந்த ஆவணங்கள் உள்ளன என்பது, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தெரியாது.
ஆவணங்களின் பட்டியல் கொடுத்தால், ஒவ்வொரு ஆவணங்களாக கேட்பர். இதனால் விசாரணை தாமதமாவதுடன், பாதிக்கப்படும் சூழலும் உள்ளது.
குறிப்பிட்ட வழக்கில் ஒருவர் மீதான விசாரணை முடிந்தாலும், அதில் தொடர்புடைய மற்றவர்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடக்கலாம். அது போன்ற நேரங்களில் இந்த ஆவணங்களை அளித்தால், வழக்கின் முழு விசாரணையில் பாதிப்பு ஏற்படலாம்.
வழக்கில் ஒரு குறிப்பிட்ட ஆவணம் தேவையானதா, தேவையில்லாததா என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய முடியும். அதனால், நீதிமன்ற பரிசீலனைக்கு விசாரணை முடியும் வரை, அந்த ஆவணங்கள் அமலாக்கத் துறை கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை அமர்வு ஒத்திவைத்தது.