ADDED : ஆக 05, 2024 01:35 AM

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப் பள்ளியில் கடந்த 29ம் தேதி நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று சிறுமியர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். இவர், பிரிட்டனுக்கு வந்த அகதி என வதந்தி பரவியது.
இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரிட்டன் அரசின் குடியேற்ற விதிகளுக்கு எதிராகவும் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
கடைகள், உணவகங்கள், வீடுகள் தாக்கப்பட்டன. கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. ஒரு சில பகுதிகளில் கடைகள் சூறையாடப்பட்டன.
ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்பாஸ்ட் ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின.
லிவர்பூல் நகரில், செங்கற்கள், பாட்டில்கள், மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை போலீசார் மீது வீசப்பட்டன. இதையடுத்து, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.