* அதிகரிக்கும் காற்றுமாசு விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்க அரசு உத்தரவு ப த் த ு இடங்களில் அபாய நிலைக்கு சென்றது
* அதிகரிக்கும் காற்றுமாசு விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்க அரசு உத்தரவு ப த் த ு இடங்களில் அபாய நிலைக்கு சென்றது
ADDED : நவ 22, 2025 12:34 AM

புதுடில்லி: காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ள விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்க பள்ளி, கல்லூரி, பல்கலை மற்றும் விளையாட்டு அமைப்புகளுக்கு டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் எட்டு நாட்களாக காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.
டில்லியில் காற்றின் தரக்குறியீடு நேற்று மாலை 364 ஆக பதிவாகி இருந்தது. இதுவே, நேற்று முன் தினம் 391 ஆக இருந்தது. புதன்கிழமை - 392, செவ்வாய்க்கிழமை - 374 மற்றும் திங்கட்கிழமை - 351ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது.
எட்டாவது நாளாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. டில்லியில் உள்ள 38 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில், டி.டி.யு., பாவானா, ஆனந்த் விஹார், முண்ட்கா, நரேலா, ரோஹிணி, விவேக் விஹார், ஜஹாங்கிர்புரி மற்றும் அசோக் விஹார் ஆகிய இடங்களில் காற்றின் தரம் அபாய நிலைக்குச் சென்றுள்ளது.
வெப்பநிலை நேற்று, குறைந்தபட்சமாக 11.2 டிகிரி, அதிகபட்சமாக 28.2 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. டில்லியில் இன்று மிதமான மூடுபனி நிலவும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை அதிகபட்சமாக 26, குறைந்தபட்சமாக 11 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் என கணித்துள்ளது.
குளிர்காலம் துவங்கி விட்டதால், டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசு அபாயகரமான நிலையை நோக்கிச் செல்வதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதேநேரத்தில், காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வர டில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநில பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநகர் முழுதும் லாரி வாயிலாக தண்ணீர் தெளிக்கப்பட்டு, தூசு கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும், காற்று மாசும் அதிகரித்துதான் வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற ஆலோசனைப்படி, திறந்தவெளி மைதானத்தில் நடத்தவுள்ள விளையாட்டுப் போட்டிகளை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க, காற்றுத் தர மேலாண்மை ஆணையம், டில்லி அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதை ஏற்றுக் கொண்ட டில்லி அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் பள்ளிகள், டில்லி கண்டோன்மென்ட் வாரிய பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள், விளையாட்டு அமைப்புகள் ஆகியவை, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் திறந்தவெளி மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ள விளையாட்டுப் போட்டிகளை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்.
மறுஅறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

