சாலை பள்ளங்கள் மூடும் பணி: பெங்களூரு மாநகராட்சி தீவிரம்
சாலை பள்ளங்கள் மூடும் பணி: பெங்களூரு மாநகராட்சி தீவிரம்
ADDED : செப் 10, 2024 11:10 PM

பி.டி.எம்., லே அவுட் : துணை முதல்வர் சிவகுமார் உத்தரவுக்கு பின், பெங்களூரில் சாலைப் பள்ளங்களை மூடும் பணியில், மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பெங்களூரு நகரின் பெரும்பாலான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. உயர் நீதிமன்றம் பல முறை எச்சரித்தும், அந்த சமயத்தில் மட்டும் பள்ளங்கள் மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் மழை பெய்தபோது, பல சாலைகளில் மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால், நகரில் உள்ள அனைத்து பள்ளங்களையும், 15 நாட்களுக்குள் மூட வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமார் கெடு விதித்தார்.
இதையடுத்து, சாலைப் பள்ளங்கள் மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மண்டலங்களிலும் அவசர அவசரமாக மூடி வருகின்றனர். உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் இப்பணிகள் நடக்கின்றன.
நகரின் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பி.டி.எம்., லே - அவுட்டில் நேற்று மண்டல கமிஷனர் வினோத் பிரியா மேற்பார்வையில் சாலைப் பள்ளங்கள் மூடப்பட்டன.
அப்போது அவர் கூறியதாவது:
சாலைப் பள்ளங்களை மூடும் பணிகளை நேரில் ஆய்வு செய்யும்படி செயற்பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகள், வார்டு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை அடையாளம் கண்டு மூடும் பணிகள் நடக்கின்றன.
மழைநீர் கால்வாய்களில் துார்வாரப்பட்டு, கட்டடக் கழிவுகளை அகற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனி மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சாலை பள்ளங்கள் குறித்து, 2024 ஏப்ரல் முதல், 438 புகார்கள் வந்தன. இதில், 379 சாலை பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.