சாலை பள்ளங்கள் மூடும் பணி விடுமுறை நாளிலும் 'விறுவிறு'
சாலை பள்ளங்கள் மூடும் பணி விடுமுறை நாளிலும் 'விறுவிறு'
ADDED : செப் 15, 2024 11:04 PM
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரின் எச்சரிக்கைக்கு பின், விழிப்படைந்த பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், சாலை பள்ளங்களை மூடி வருகின்றனர். விடுமுறை நாளிலும் பணிகள் நடக்கின்றன.
பெங்களூரில் சாலை பள்ளங்களால் பொது மக்கள், வாகன பயணியர் அவதிப்படுகின்றனர். விபத்துகள் நடக்கவும் காரணமாகின்றன. சமீபத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன், துணை முதல்வர் சிவகுமார், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தான் திரும்பி வருவதற்குள் நகரின் அனைத்து சாலை பள்ளங்களயும் மூட வேண்டும் என, எச்சரித்திருந்தார்.
அதன்பின் விழித்து கொண்ட, மாநகராட்சி அதிகாரிகள் இரவு, பகலாக பள்ளங்களை மூடுகின்றனர். விடுமுறை நாளான நேற்றும் பணிகள் நடந்தன.
இது தொடர்பாக, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:
தற்போது எலஹங்கா மற்றும் தாசரஹள்ளி மண்டலத்தின், வெவ்வேறு வார்டுகளில் சாலை பள்ளங்களை, அடையாளம் கண்டு மூடப்படுகின்றன. விடுமுறை நாட்களிலும் பணிகள் நடக்கின்றன.
மண்டல கமிஷனர், இணை கமிஷனர், பொறியாளர்கள் ரோடுகளில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பெங்களூரில் மழை நின்றுள்ளது. எனவே பாக்கியுள்ள பள்ளங்களும் விரைவில் மூடப்படும். எலஹங்காவின், 865 கி.மீ., துாரமுள்ள 5,433 சாலைகளுக்கு தார் போட திட்டம் வகுத்துள்ளோம். விரைவில் பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.