ADDED : ஆக 27, 2024 05:03 AM
மைசூரு : தசராவை முன்னிட்டு மைசூரு நகரில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது.
மைசூரு தசரா, அக்டோபர் 3ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் 14 யானைகளில், முதற்கட்டமாக ஒன்பது யானைகள் மைசூருக்கு அழைத்து வரப்பட்டன. யானைகளுக்கு உடல் எடை சோதனையும் செய்யப்பட்டது. பின், யானைகளுக்கு நடைபயிற்சி துவக்கப்பட்டது.
இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் கஞ்சன் என்ற யானை, நடைபயிற்சியில் பங்கேற்கவில்லை. ஆனால் நேற்று நடைபயிற்சியில் பங்கேற்றது.
நடைபயிற்சி முடிந்தபின் மைசூரு அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரத்தில் ஒன்பது யானைகளும் ஓய்வு எடுத்தன.
பின், யானைகளை உடல் முழுதும் தேய்த்து, பாகன்கள் குளிப்பாட்டினர். “தினமும் நடைபயிற்சி முடித்து வந்த பின் யானைகள் மீது, குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறோம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை யானைகளை தேய்த்து குளிப்பாட்டுகிறோம்,” என, பாகன் சிவு கூறினார்.
மைசூரு தசராவை காண வெளிநாட்டிலும் இருந்து ஏராளமானோர் வருவர் என்பதால், நகரை அழகுப்படுத்தும் பணிகளும், குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்கும் பணிகளும் துவங்கி உள்ளன.