ராணுவ அருங்காட்சியகம் மீது ராக்கெட் குண்டு தாக்குதல்; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
ராணுவ அருங்காட்சியகம் மீது ராக்கெட் குண்டு தாக்குதல்; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
UPDATED : செப் 07, 2024 02:09 PM
ADDED : செப் 07, 2024 10:38 AM

இம்பால்: மணிப்பூரில் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் சிங்கின் வீட்டின் மீது கூகி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலவரம்
கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்டி சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில், 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளாமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியது.
அதன்பிறகு, பல நாட்களுக்குப் பிறகு, மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையினால் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பியது. இருப்பினும், கூகி கிளர்ச்சியாளர் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி கொண்டே தான் இருக்கின்றனர்.
தாக்குதல்
இந்த நிலையில், நேற்று அதிகாலை தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ள பிஷ்ணுபுர் மாவட்டத்தில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ராக்கெட் தாக்குதல்
இதைத் தொடர்ந்து, மணிப்பூரின் முதல் முதல்வரான மைரெம்பாம் கொய்ரெங் சிங்கின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிறுமி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதோடு, 1944ல் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அர்ப்பணித்து வைத்த ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ராக்கெட் தாக்குதல் சுராசந்த்பூர் மலைப்பகுதியில் இருந்து நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
5 பேர் சுட்டுக்கொலை
இந்த ராக்கெட் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இன்று மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் கூகி மற்றும் மெய்தி சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதனால், மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.