ADDED : ஆக 31, 2024 05:07 AM

பெங்களூரு : நடிகர் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் அளித்த வழக்கில், சிறை அதிகாரிகளிடம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ரேணுகாசாமி கொலை வழக்கில், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த தர்ஷன், தற்போது பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். பரப்பன அக்ரஹாராவில், அவருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது தொடர்பாக, ரவுடிகள் மீது இரண்டு வழக்குகள், சிறை அதிகாரிகள் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கைதிகள், சிறை அதிகாரிகளிடம் தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சாரா பாத்திமா தலைமையிலான, தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். சிறை அதிகாரிகளிடம் உதவி போலீஸ் கமிஷனர் தர அதிகாரிகளும்; கைதிகளிடம் இன்ஸ்பெக்டர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியும் முடியும் தருவாயில் உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.