பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் ரூ.1 கோடி பேரம்? விசாரணையில் நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்
பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் ரூ.1 கோடி பேரம்? விசாரணையில் நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்
ADDED : ஜூன் 14, 2024 07:48 AM

பெங்களூரு: ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட 13 பேர் உள்ள அன்னபூரனேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தை சுற்றி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கை திசை திருப்பும் வகையில், இறந்த ரேணுகாசாமியின் உடல் கூறு அறிக்கையை திருத்தி தரும்படி, மருத்துவருக்கு ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்ற தன் ரசிகரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ராகவுடா உட்பட 13 பேர் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். போலீஸ் காவலில் உள்ள அவர்களிடம், அன்னபூரனேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. கொலை நடந்த பட்டணகெரே ஷெட்டிற்கு, நேற்று முன்தினம் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
மொபைல் பேச்சு
அப்போது, கொலை செய்த ஒரு நபர், போலீசாரின் மொபைல் போனை வாங்கி, நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். இந்த காட்சிகள், 'டிவி' சேனல்களில் நேற்று ஒளிபரப்பப்பட்டன. தர்ஷனுக்கு சிகரெட், வேறு சிலருக்கு பிரியாணி வாங்கி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால், குற்றவாளிகளுக்கு போலீசாரே உதவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
144 தடை உத்தரவு
மேலும், அன்னபூரனேஸ்வரி நகர் போலீஸ் நிலையம் முன், ஊடகத்தினர், பொது மக்கள் ஏராளமானோர் தினமும் காத்திருக்கின்றனர். உள்ளே என்ன நடக்கிறது என்பது, வெளியில் தெரிய கூடாது என்பதற்காக, யாரும் பார்க்காத வகையில், போலீஸ் நிலையத்தை சுற்றி, 'சாமியானா' பந்தல் மூலம் நேற்று மறைக்கப்பட்டது.
ரசிகர்கள், பொது மக்கள் அதிக அளவில் வருவதை தடுக்கும் வகையில், போலீஸ் நிலையத்தை சுற்றி, 2-00 மீட்டர் சுற்றளவுக்கு, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, நேற்று 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு, வரும் 17ம் தேதி வரை அமலில் இருக்கும்.
போலீஸ் நிலையம் செல்லும் சாலையில், எந்த வாகனங்களும் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு, அப்பகுதியினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மருத்துவரிடம் பேரம்
ரேணுகாசாமியை தாங்கள் தான் கொலை செய்தோம் என்று சரண் அடைந்தவர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் தருவதாக தர்ஷன் பேரம் பேசி, 10 லட்சம் ரூபாய் முன் பணமும் தந்தாராம். அந்த பணத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கொலை வழக்கில் இருந்து, தர்ஷனை விடுவிக்க, திரைமறைவில் பெரிய அளவில் முயற்சிகள் நடந்து வருவது தெரியவந்துள்ளது.
ரேணுகாசாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை மருத்துவருக்கு, செல்வாக்கு மிக்க ஒரு தலைவர் தொடர்பு கொண்டு, ஒரு கோடி ரூபாய் தருகிறேன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உடல் கூறு அறிக்கையில் குறிப்பிடும்படி பேரம் பேசிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர், உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதன்பின், முழு போலீஸ் பாதுகாப்புடன், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும், மருத்துவருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அப்ரூவராகும் தீபக்
இதற்கிடையில், கைது செய்யப்பட்டவர்களில் தீபக் என்பவர், அப்ரூவராக மாறி, கொலை செய்த முழு தகவலையும், புட்டு புட்டு வைத்துள்ளார். எனவே நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து, அப்ரூவராகி மாறி உள்ளார் என்பதை காண்பிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். அடுத்தடுத்த விசாரணையில், இன்னும் என்னென்ன அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று பொது மக்கள் பேசி கொள்கின்றனர்.
தர்ஷன் மகன் கவலை
சமூக வலைதளங்களில், தன் தந்தையை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதை பார்த்து, கவலை அடைந்த நடிகர் தர்ஷன் மகன் வினீஷ், சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்ட அறிக்கை:
என் தந்தை குறித்து கெட்ட மற்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் 15 வயது சிறுவனாக இருக்கலாம். ஆனால், எனக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை, நீங்கள் கருதவில்லை.
இத்தகைய கஷ்டமான சூழ்நிலையில், என் தந்தை, தாய்க்கு உங்கள் அனைவரின் ஆதரவு தேவைப்படுகிறது. நீங்கள் என்னை திட்டி குறிப்பிடுவதால், எதுவும் மாற்ற முடியாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.