டில்லியில் 'டேட்டிங்' செயலியால் அரங்கேறிய ரூ.1.2 லட்சம் மோசடி
டில்லியில் 'டேட்டிங்' செயலியால் அரங்கேறிய ரூ.1.2 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 01, 2024 12:19 AM

புதுடில்லி: டில்லியில் 'டேட்டிங்' செயலி வாயிலாக இளைஞரிடம், 1.2 லட்சம் ரூபாய் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
டில்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர் ஒருவருக்கு, 'டிண்டர் டேட்டிங்' செயலி வாயிலாக வெர்ஷா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
தன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, விகாஸ் மார்க்கின் லஷ்மி நகரில் உள்ள 'பிளாக் மிர்ரர் கபே' என்ற காபி ஷாப்புக்கு, அந்த இளைஞரை கடந்த 23ம் தேதி வர்ஷா அழைத்தார்.
அதன்படி, அங்கு சென்ற இளைஞர், இளம்பெண்ணுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த அந்தப் பெண்ணுக்கு அழைப்பு வந்ததை அடுத்து, அவசரமாக கிளம்பிச் சென்றார்.
இதையடுத்து, புறப்பட முயன்ற இளைஞரிடம் சாப்பிட்டதற்கான பில் வழங்கப்பட்டது. சில ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே இருவரும் சாப்பிட்ட நிலையில், 1.22 லட்சம் ரூபாய்க்கு பில் கொடுக்கப்பட்டதை பார்த்து, இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்ட போது, இளைஞரை மிரட்டிய ஊழியர்கள், அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக 1.22 லட்சம் ரூபாயை வசூலித்தனர்.
அங்கிருந்து வந்த இளைஞர், அப்பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகாரளித்தார். ஹோட்டலுக்கு விரைந்த போலீசார், அதன் உரிமையாளர் அக் ஷய் பாஹ்வாவிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
'பிளாக் மிரர் கபே' ஹோட்டலை அக் ஷய், அவரின் நண்பர்களான வன்ஷ் பாஹ்வா மற்றும் ஆன்ஷ் குரோவர் ஆகியோர் சேர்ந்து நடத்தி வந்தனர்.
ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றும் ஆர்யன் என்பவர், வெர்ஷா என்ற பெண்ணை பாதிக்கப்பட்ட இளைஞருடன் டிண்டர் செயலி வாயிலாக போலி கணக்கை உருவாக்கி பழக வைத்துள்ளார். அதன்படி, அவரை வரவழைத்து இந்த மோசடி அரங்கேறி உள்ளது.
வெர்ஷாவின் இயற்பெயர் அப்சான் பர்வீன். இந்த மோசடி வாயிலாக கிடைக்கும் தொகையில், அந்த பெண்ணிற்கு 15 சதவீதமும், உதவும் மேலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் 45 சதவீதமும், மீதமுள்ள 40 சதவீதம் உரிமையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அப்சான் பர்வீன், அக் ஷய் பாஹ்வா உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் கும்பல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.