மஹாராஷ்டிராவில் பெண்களுக்கான மாதம் ரூ.1,500 திட்டம் துவக்கம்
மஹாராஷ்டிராவில் பெண்களுக்கான மாதம் ரூ.1,500 திட்டம் துவக்கம்
ADDED : ஆக 18, 2024 04:42 AM

புனே: மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு ஆளும் மஹாயுதி கூட்டணி, 21 - 60 வயது வரையிலான திருமணமான, விவாகரத்து பெற்ற, ஆதரவற்ற பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. 'என் பெண் சகோதரிக்கு' என்ற அந்த திட்டம் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.
பாலேவாடி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, “மக்களாகிய நீங்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளித்தால், இந்த தொகை 2,000 அல்லது 3,000 ஆக உயர்த்தப்படும். இந்த திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்,'' என்றார்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஓட்டு வங்கியை குறிவைத்தே இந்த திட்டத்தை மஹாயுதி கூட்டணி அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.