துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1.68 கோடி தங்கம் சிக்கியது
துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1.68 கோடி தங்கம் சிக்கியது
ADDED : ஜூலை 24, 2024 11:58 PM
தேவனஹள்ளி : துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.68 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு தேவனஹள்ளி கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு, துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் படி, பயணியரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ஒரு பயணி பிஸ்கட் வடிவில் கடத்திய தங்கம், இன்னொரு பயணி சட்டை காலருக்குள் மறைத்து கடத்திய தங்க துகள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடம் இருந்து 2,579 கிராம் தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ஒரு கோடியே 68 லட்சத்து 95 ஆயிரத்து 725 ரூபாய்.
இதுபோல துபாயில் இருந்து வந்த விமானத்தில் கடத்தப்பட்டு வந்த விலை உயர்ந்த 25 ஐ போன்கள்; 5 ஆப்பிள் வாட்ச்களை கடந்த 20 ம் தேதி, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

