ADDED : ஏப் 27, 2024 11:17 PM
கலபுரகி: கலபுரகி மாநகராட்சி காங்கிரஸ் முன்னாள் மேயர் சரணரு மோடி, காரில் இருந்து இரண்டு கோடி ரூபாய் சிக்கியுள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதைத் தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் கலபுரகி வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க, ஒரு கும்பல் ரயிலில் பணம் கடத்தி வருவதாக, வருமான வரி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் நேற்று காலை கலபுரகி ரயில் நிலையத்தில், வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன நிறுத்தும் இடத்தில், ஒரு கார் நீண்ட நேரமாக நின்றது. அங்கு வந்த ரயிலில் இருந்து இறங்கியவர்களில் இரண்டு பேர், அந்த காரில் ஏறினர்.
சந்தேகத்தின் பேரில் காரை மறித்து, வருமான வரி துறையினர் சோதனை நடத்தியபோது, ரயிலில் வந்து காரில் ஏறியவர்களிடம் இருந்து, இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கார் கலபுரகி மாநகராட்சி முன்னாள் மேயர் சரணரு மோடிக்கு சொந்தமானது என்று தெரிந்தது. விசாரணை நடக்கிறது.

