கும்பமேளாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்
கும்பமேளாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்
ADDED : மார் 12, 2025 11:28 PM

பெலகாவி : ''பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்த நான்கு பேர் குடும்பங்களுக்கு, தலா 25 லட்சம் ரூபாயை, உத்தர பிரதேச அரசு இழப்பீடு வழங்கி உள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் முகமது ரோஷன் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவின்போது கடந்த மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெலகாவியை சேர்ந்த நான்கு பேர் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்தனர்.
'இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் முகமது ரோஷன் அளித்த பேட்டி:
பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் ரவிமந்தருடன் பேச்சு நடத்திய பின், உயிரிழந்த ஜோதி ஹதராவதா, மேகா ஹதராவதா, மகாதேவி பவனுார், அருண் கோபர்டே ஆகியோரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிற்கு, இழப்பீட்டு தொகை நேரடியாக டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதை கிராம கணக்காளர் மூலம் உறுதி செய்துள்ளோம்.
இறந்தவர்களின் குடும்பத்தினர், உடல்கள் குறித்த அறிக்கையில், ஒன்று அல்லது இரண்டு பேரின் பெயர்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக தெரிவித்தனர். எனவே, சரி செய்து, பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டருக்கு வாட்ஸாப், மின்னஞ்சல் மூலம் அனுப்பினோம்.
பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்பு சான்றிதழ், இரண்டு நாட்களில் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என, அம்மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உறுதி அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.