37 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.28,000 கோடி பயிர்க்கடன்
37 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.28,000 கோடி பயிர்க்கடன்
ADDED : மார் 08, 2025 02:13 AM
நடப்பாண்டு 37 லட்சம் விவசாயிகளுக்கு, 28,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க, இலக்கு நிர்ணயித்து உள்ளோம்
மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் பிகார்டு வங்கிகளில், நடுத்தர, நீண்ட கால கடன் மீதான 240 கோடி ரூபாய் வட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது
'யஷஸ்வினி' திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும், 59,000 பயனாளிகளுக்கு 103 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டது
நடப்பாண்டு 3,000 விவசாய கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படும்
குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு கொள்முதல் செய்ய, குவிண்டாலுக்கு 7,550 ரூபாயுடன், மாநில அரசு சார்பில் கூடுதலாக 450 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக, 138 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் துவரம் பருப்பு அதிகம் விளையும் கலபுரகி, பீதர், யாத்கிர், விஜயபுரா, பாகல்கோட், ராய்ச்சூர், கொப்பால், கோலார், சித்ரதுர்கா, சிக்கபல்லாபூர் பகுதி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்
கூட்டுறவு துறையின் செயல் திறனை அதிகரிக்கவும், மக்களுக்கு தேவையான சேவைகள் எளிதில் கிடைக்கவும், கீழ்க்கண்ட மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும்.
1. மாநிலத்தின் பதிவு செய்யப்பட்ட, அனைத்து குடியிருப்பு கட்டுமான கூட்டுறவு சங்கங்கள் பற்றிய தகவல்கள், கர்நாடக கூட்டுறவு குடியிருப்பு வாரியம் சார்பில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்
2. டிபாசிட்தாரர்களின் நலனை பாதுகாக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் சஹாய வாணி துவக்கப்படும்
3. கூட்டுறவு சங்கங்களின் கணக்கு தணிக்கை அறிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்
கர்நாடக கிட்டங்கி கார்ப்பரேஷன் சார்பில் மேற்கொண்டு, பாதியில் நின்றுள்ள கிட்டங்கிகளை கட்டி முடிக்க, 329 கோடி ரூபாய் வழங்கப்பட்டது; பாக்கியுள்ள 47 கோடி ரூபாய் நடப்பாண்டில் வழங்கப்படும்
விவசாய உற்பத்தி மார்க்கெட் கமிட்டிகளில், லைசென்ஸ் பெற்று, பணியாற்றுவோர் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும் தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
பெங்களூரில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், வாகனங்கள் நெருக்கடி அதிகம் என்பதால், பெங்களூரு புறநகரில் புதிதாக சாட்டிலைட் மார்க்கெட் அமைக்கப்படும்
கொப்பால் மாவட்டத்தின், பூதுகும்பா கிராமத்தில் ஆடுகள், கிடாக்கள் மார்க்கெட்டில் 25 கோடி ரூபாய் செலவில், தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும்
கல்யாண கர்நாடகா பகுதியில், பால் உற்பத்தியை ஊக்கப்படுத்த, முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் வழங்கப்படும். கலபுரகியில் புதிதாக மெகா பால் பண்ணை துவக்க, கே.கே.ஆர்.டி.பி., சார்பில் 50 கோடி ரூபாய் வழங்கப்படும்
கலபுரகியில் 10 கோடி ரூபாய் செலவில், மண்டல கூட்டுறவு பவன் கட்டப்படும். கிராமப்பகுதிகளில் கே.கே.ஆர்.டி.பி., ஒருங்கிணைப்பில் 60 கோடி ரூபாய் செலவில் கிட்டங்கிகள் கட்டப்படும்
ஆடுகள், கிடாக்கள் வளர்ப்போரின் வசதிக்காக, பெங்களூரில் உயர்தரமான ஆடுகள், கிடாக்கள் மார்க்கெட் துவக்கப்படும்.
சிக்கபல்லாபூரில் விவசாய உற்பத்தி மார்க்கெட் கமிட்டி சார்பில், சர்வதேச தரம் வாய்ந்த ஹைடெக் பூ மார்க்கெட், தங்கவயலில் அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், அதிநவீன விவசாய மார்க்கெட் அமைக்கப்படும்.