போதை பொருள் அனுப்பியதாக கூறி வாலிபரிடம் ரூ.29.4 லட்சம் பறிப்பு
போதை பொருள் அனுப்பியதாக கூறி வாலிபரிடம் ரூ.29.4 லட்சம் பறிப்பு
ADDED : ஆக 07, 2024 11:32 PM
பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில், பார்சலில் போதைப்பொருள் அனுப்பியதாக மிரட்டி, வாலிபரிடம், 29.40 லட்சம் ரூபாய் பணம் பறித்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கூரியர் சர்வீஸ் வாயிலாக, தாய்வான் நாட்டுக்கு அனுப்பிய பார்சலில் போதை பொருள் இருப்பதாகவும், கைது செய்ய போவதாகவும் அச்சுறுத்தி, பாலக்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபரிடம், 29.40 லட்சம் ரூபாயை ஆன்லைன் வழியாக பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பாலக்காடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை துவங்கியுள்ளனர்.
சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கூரியர் நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக கூறி, புகார்தாரரை மொபைல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.
மேலும், தாய்வான் நாட்டுக்கு அனுப்பிய பார்சலில் போதை பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் உங்களை அழைப்பார்கள் என கூறியுள்ளனர்.
அதன்பின், குற்றப்பிரிவு போலீசார் என கூறி வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டுள்ளனர். 'உங்களை கைது செய்யப் போகிறோம்' என அச்சுறுத்தி உள்ளனர். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க, பணம் கேட்டுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு, புகார்தாரர் 29.40 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். அதன்பின், அழைத்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியாததால், ஏமாற்றப்பட்டதை அறிந்த புகார்தாரர், தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் வாயிலாக புகார் பதிவு செய்தார்.
வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். இது போன்ற மோசடிகள், பாலக்காடு மாவட்டத்தில் அதிகரித்துள்ளன. போதை பொருள் குறித்தோ, போலீஸ் பேசுவதாக கூறியோ அச்சுறுத்தல் மொபைல்போன் அழைப்புகள் வந்தால், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது மாவட்ட சைபர் கிரைம் பிரிவை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.