ஆர்.டி.ஓ., அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம், நகை பறிமுதல்
ஆர்.டி.ஓ., அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம், நகை பறிமுதல்
ADDED : ஆக 16, 2024 06:53 AM

பல்லாரி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், பல்லாரி ஆர்.டி.ஓ., அதிகாரி வீட்டில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் டவுன் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் நாகேஷ். பல்லாரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆவணங்கள் சேகரிப்பு பிரிவில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, பல்லாரி லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் முகமது ரபீக்கிற்கு, அடிக்கடி புகார் சென்றது.
இதையடுத்து, நாகேஷின் வீட்டிற்கு முகமது ரபீக் தலைமையில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று காலை 8:00 மணிக்கு சென்றனர். நாகேஷ், அவரது குடும்பத்தினரின் மொபைல் போன்களை வாங்கி, 'சுவிட்ச் ஆப்' செய்தனர். பின், சோதனையை துவக்கினர்.
வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும், அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மதியம் 2:00 மணி வரை நடந்த சோதனையில், கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் ரொக்கம்; தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

